நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் கண்ணாடி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாவும், அதனை தடுக்க தவறினால் மலைவாசஸ்தல டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, டாப் சிலிப் போன்ற இடங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலய பகுதியிலும் ஜூன் 15 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து ஜூன் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.