திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கத்திக்குத்தில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளருக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினர்.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் தெரசா. இவர், பழவூர் கிராமத்தில் அம்மன் கோயில் திருவிழாவில் நேற்று முன்தினம் அதிகாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவர் வாக்குவாதம் செய்து கத்தியால் குத்தியதில் மார்க்ரெட் தெரசாவுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.