வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தர்மசாலா : சீனாவால் கடத்திச் செல்லப்பட்ட திபெத்திய புத்த மதத் தலைவரான, 11வது பஞ்சன் லாமாவை விடுவிக்குமாறு, திபெத் நிர்வாகம் அந்நாட்டை வலியுறுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான சீனா, திபெத் பிராந்தியத்திற்கு தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. எனினும், திபெத்தில் வசிக்கும் புத்த மதத்தினர், சீனாவின் இந்த கூற்றை ஏற்க மறுத்து, திபெத்தை தனி நாடாகவே கருதுகின்றனர்.
புத்த மத தலைவர் தலாய் லாமா, நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இருந்து, திபெத் பிராந்தியத்தை நிர்வகித்து வருகிறார். தனக்குப் பின் நிர்வாகத்தை நடத்தும் அடுத்த தலைவராக, கெதுன் சோக்கி நைமா என்ற, 6 வயது சிறுவனை, 11வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்து, 1995ல் தலாய் லாமா அறிவித்தார். இதை ஏற்க மறுத்த சீனா, அதே ஆண்டு, அந்த சிறுவனையும், அவரது குடும்பத்தினரையும் கடத்திச் சென்றது.
அதன் பின், பொது வெளியில் பஞ்சன் லாமா வரவே இல்லை.இந்நிலையில், நைமாவின் 33வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று தர்மசாலாவில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், திபெத்திய புத்த மதத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, திபெத் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த 1995ல்கடத்திச் செல்லப்பட்ட பஞ்சன் லாமா மற்றும் அவரது குடும்பத்தினரை, சீன அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
அவர்கள் சுதந்திரமான வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும். நைமா பற்றிய வரலாற்றை அழிக்க, சீனா எடுக்கும் முயற்சிகள் பலனளிக்காது. அவரை யாரும் மறக்க மாட்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement