பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.
‘மதன்’ மற்றும் ‘டாக்சிக் மதன்’ 18 பிளஸ் போன்ற யூ-டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், அந்த சேனல்களின் நிர்வாகியான மதனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்திருந்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மதன் மீது காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால் அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க தாமதம் ஆவதை தொடர்ந்து இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி மதன் தரப்பிலிருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM