புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக் கப்பட்டது ஆகிய காரணங்களால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் மின்வெட்டு நிலவுகிறது. இந்நிலையில், அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு சீராக விநியோகம் செய்யவில்லை என சில மாநில அரசுகள் குறை கூறி வருகின்றன.
இதுகுறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று முன்தினம் கூறும்போது, “நாட்டில் போதுமான அளவுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. கோல் இந்தியா, சிங்கரேனி காலியரிஸ் மற்றும் கோல்வாஷரிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் 7.25 கோடி மெட்ரிக்டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இதுதவிர அனல் மின் நிலையங்களில் 2.2 கோடி மெட்ரிக் டன் இருப்பு உள்ளது” என்றார்.
இதனிடையே, அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக விநியோகிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒரு வாரத்தில் நிலக்கரி விநியோகம் 10% அதிகரித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
– பிடிஐ