சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச் சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் ஆகிய இரு புதிய அரசுஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளின் தொடக்க விழா, சென்னை அண்ணா அரங்கில் நேற்று நடந்தது. புதிய அமைப்புகளை தொடங்கி வைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
அரசு ஊழியர்களின் முக்கியகோரிக்கையான பழைய ஓய்வூதியதிட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்களின் கோரிக்கைகளுக்காக நான் போராடுவேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘‘பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு இப்போது பாதுகாப்பு இல்லை. தொடக்கக்கல்வி துறையில் 42%ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.புதிய கல்விக் கொள்கையை பொறுத்தவரை தாய்மொழியில் கல்வி, 6 வயது முதல் ஆரம்பக்கல்வி உள்ளிட்ட நல்ல அம்சங்களை வரவேற்கலாம். அதேநேரத்தில் இந்தி தேவையில்லை. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கல்வியே போதுமானது.அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளும் அலுவல் மொழிகள்தான்’’ என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கோ.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.