அகமதாபாத்: குஜராத்தில் அதிக விலை மதிப்பிலான கடத்தல் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. கடந்த ஆண்டு, அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3000 கிலோ போதைப் பொருள் இருந்த கன்டெய்னர் சிக்கியது. இதைத் தொடர்ந்து, கடந்த 21ம் தேதி, குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் ரூ.1439 கோடி மதிப்பிலான போதைப் பொருள் இருந்த கன்டெய்னர் சிக்கியது. இதுதொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் கைதாகி இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்நிலையில், குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் படகு ஒன்றை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் நேற்று மடக்கி பிடித்தனர். இதில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தி வரப்பட்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக படகில் வந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.