நடந்து முடிந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவு தலைவரான மரைன் லீ பென் தமது தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற தவறியுள்ளார் மரைன் லீ பென்.
ஜனாதிபதி மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லீ பென் 41.8% வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மரைன் லீ பென் 42% வாக்குகளை கைப்பற்றுவார் என கூறப்பட்டதே தமது கொள்கைக்கான வெற்றி என குறிப்பிட்டுள்ள அவர்,
ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிரான அரசியல் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், லட்சக்கணக்கான பிரான்ஸ் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து தங்களைத் தெரிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, முன்னெப்போதையும் விட தங்கள் கட்சி அதிக உறுதியுடன் இருப்பதாக லீ பென் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்சு மக்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாடு முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. இந்தத் தோல்வி நம்பிக்கையின் ஒரு வடிவம் எனவும் லீ பென் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளைவிட எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் மிகக் கொடூரமாக இருக்கப் போகிறது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு மக்களுக்கான எனது உறுதிப்பாட்டை நான் தொடர்வேன். அது இன்னும் முடியவில்லை. இன்னும் சில வாரங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ள லீ பென்,
பிரான்ஸ் மக்களை தாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என உறுதி அளித்துள்ளார்.
2002ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 18% வாக்குகளை மட்டுமே கைப்பற்றியிருந்த லீ பென், 2017 தேர்தலில் 34% மக்களின் ஆதரவைப் பெற்றார்.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் லீ பென் 42% வாக்குகளைப் பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் மோசமான செய்தி என்பது மட்டுமின்றி, எச்சரிக்கை தகவலும் கூட என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
பிரான்சின் 11வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இமானுவல் மேக்ரான் 58.2% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.