புதுடெல்லி: இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைக்க, பிரதமர் மோடி, ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணைய தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். இதில், இந்தியா-ஐரோப்பிய ஆணையம் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம், வர்த்தகம், பருவநிலை, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேசினர். முன்னதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை உர்சுலா சந்தித்தார். அப்போது, உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார விளைவுகள் பற்றியும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரதமர் மோடி- உர்சுலா இடையேயான பேச்சுவார்த்தையில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வேகமாக மாறி வரும் புவிசார் அரசியல் மற்றும் நம்பகமான தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையம் சார்பில் அமெரிக்காவில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்போது இந்தியாவில் இது அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு?: உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவுடனான உறவை பலப்படுத்த மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது போர் விமானங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு பிரிட்டன் ஒப்பு கொண்டது. தற்போது ஐரோப்பிய ஆணையம் இந்தியா உடனான வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.