பிரான்ஸ்
அதிபர் தேர்தலில்
இமானுவேல் மேக்ரான்
மீண்டும் வெற்றி பெற்றிருப்பதும், வலது சாரி தலைவரான மரீன் லீ பென் தோல்வி அடைந்திருப்பதையும் ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. அவர் அதிபராகியிருந்தால் பெரும் நிம்மதிக் கேடு ஏற்பட்டிருக்கும் என்பது ஐரோப்பிய நாடுகளின் கருத்தாக உள்ளது.
அதிபர் இமானுவேல் மேக்ரான், ஒரு மையவாதி. எந்தப் பக்கமும் சார்புடையவர் அல்ல. அவரது செல்வாக்கு சற்றும் குறையாமல் இருப்பதையே மீண்டும் அவர் அதிபர் தேர்தலில் வெல்வது காட்டியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உக்ரைன் போரில் மறைமுகமாக ரஷ்யாவுக்கு ஆதரவாகவே இருக்கிறார் மேக்ரான். இருந்தும் கூட அவரது செல்வாக்கு பிரான்சில் குறையவில்லை. காரணம், லீ பென். வலதுசாரியான லீ பென் மீது பிரான்சில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் கூட எதிர்ப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே மேக்ரான் மீண்டும் எளிதாக வெற்றி பெற்று விட்டார்.
2வது முறையாக அதிபராகியுள்ள மேக்ரானுக்கு ஏகப்பட்ட சவால்கள் காத்துக் கிடக்கின்றன. ஜூன் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. பிரான்சின் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் காத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் சுமூகமாக செய்து முடிக்கும் பொறுப்பு மேக்ரானுக்கு உள்ளது. மறுபக்கம் உக்ரைன் போரினால் பிரான்சுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சரி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
எங்களையா டிரான்ஸ்பர் பண்றீங்க.. மாணவிகளை கடத்திய டீச்சரம்மாக்கள்.. உ.பியில் பகீர்!
வெற்றி பெற்ற பின்னர் பாரீஸ் ஈபிள் டவர் முன்பு கூடிய மக்களிடையே மேக்ரான் பேசுகையில், எனக்கு வாக்களிக்காத மக்களின் கோபத்தையும் நான் மதிக்கிறேன். அவர்களுக்கும் சேர்த்தே நான் அதிபராக செயல்படுவேன். அவர்களது அபிலாஷைகளையும் நான் பூர்த்தி செய்வேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் மேற்கொண்ட பணிகள் தொடரும். எனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், எதிர்ப்பாளர்களின் விருப்பங்களையும் நான் பூர்த்தி செய்வேன் என்றார் மேக்ரான்.
இந்த வெற்றி மேக்ரானுக்கு முழு அளவிலான மகிழ்ச்சியை நிச்சயம் தந்திருக்காது. காரணம் கடந்த 2017ம் ஆண்டு இதே லீ பென்னைத்தான் மேக்ரான் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் அப்போது அவருக்குக் கிடைத்த வாக்குகள் 66 சதவீதமாகும். இப்போது அது குறைந்து விட்டது. இது லீபென்னின் மவுசு அதிகரித்திருப்பதையும் காட்டுவதால் மேக்ரான் தரப்பு சற்றே கவலை அடைந்துள்ளது.
மறுபக்கம், அதிபர் தேர்தலில் 3வது முறையாக தோல்வி அடைந்துள்ளார் லீபென். பல வருடங்களாகவே அதிபர் ஆவதற்காக தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வருபவர் லீ பென். தேசிய முன்னணி கட்சியின் நிறுவனரான ஜீன் மேரி லீ பென்னின் மகள்தான் மரீன் லீபென். ஜீன் மேரி லீபென் ஒரு இனவெறி தலைவர். பகிரங்கமாகவே தனது இனவெறியை வெளிப்படுத்தி வந்தவர் அவர். இவரை 2015ம் ஆண்டு கட்சியை விட்டு நீக்கிய மரீன் லீ பென் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். கட்சிப் பெயரையும் கூட மாற்றினார். ஆனால் இவரது தந்தையின் இனவெறி கொள்கைகளை மட்டும் முழுமையாக கைவிடவில்லை. இதனால்தான் மரீன் லீ பென் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை வரவில்லை. ஐரோப்பிய நாடுகளும் கூட மரீன் அதிபரானால், ஐரோப்பிய கண்டத்தின் அமைதி பாதிக்கப்படும் என்றும் அச்சமடைந்திருந்தனர். ஆனால் மேக்ரான் அந்த அச்சத்தை போக்கி விட்டார்.