டெல்லி: பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென்னை தோற்கடித்து இம்மானுவேல் மாக்ரோன் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான பிரான்ஸ் அரசியல் அமைப்பில் ஐந்தாவது குடியரசின் ஆளும் தலைவர் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். குறிப்பாக, ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் பதிவான 97 சதவீத வாக்குகளில் மரைன் லு பென் 41.5 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், மேக்ரோன் 57.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து அதிபர் இம்மானுவேல் கூறுகையில்: இந்த நாட்டில் பலர் எனக்கு வாக்களித்தனர். குறிப்பாக தீவிர வலதுசாரிகளின் கருத்துகளை விலக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு வாக்களித்துள்ளனர். நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் வரும் ஆண்டுகளில் நான் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். பிரான்ஸ் நாட்டில் யாரும் வாழ வழியில்லாமல் கை விடப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்த மீண்டும் பிரான்ஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்மானுவேல் மேக்ரோனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரான்சின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.