ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடந்த 8 வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போரில், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான மரியுபோல் நகரை கடந்த வாரம் ரஷ்யப்படை கைப்பற்றிவிட்டதாக, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ரஷ்யப் படையின் இந்த வெற்றியைப் பாராட்டி, ரஷ்ய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த அதிபர் புதின், மரியுபோல் நகரிலுள்ள `அசோவ்ஸ்டல்’ இரும்புத் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தாமல் அந்தத் தொழிற்சாலையைக் கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மரியுபோல் நகரில் உக்ரைன் பொதுமக்கள் ரஷ்யப் படையினரால் தாக்கப்படுவதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், ரஷ்யா அசோவ்ஸ்டல் இரும்புத் தொழிற்சாலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற ஏதுவாக, போரை நிறுத்திவைப்பதாகக் கூறியிருக்கிறது. இதுகுறித்து, ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், `ஏப்ரல் 25, 2022 முதல் எந்தவொரு விரோத நடவடிக்கையையும் ரஷ்யப் படை ஒருதலைபட்சமாக நிறுத்தும். பொதுமக்கள் தாங்கள் வெளியேறுவதற்கு எந்த வழியைத் தேர்வு செய்கிறார்களோ, அந்த வழியிலேயே அவர்கள் அழைத்துச்செல்லப்படுவார்கள். மேலும், அசோவ்ஸ்டலில் மனிதாபிமான வெளியேற்றம்தொடங்கப்படுவதை, உக்ரேனியப் படை வெள்ளைக் கொடி காட்டி, தாங்கள் தயாராக இருப்பதை வெளிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.