புதுச்சேரி : மத்திய அரசின் வழிகாட்டுதலோடு ‘புதுச்சேரி மாடல்’ என்ற புதுமையான வளர்ச்சித் திட்டத்தை விரைவில் காண இருக்கிறோம்’ என கவர்னர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில், கவர்னர் தமிழிசை பேசியதாவது:
நமது நாட்டில் இன்று வரை 187 கோடியே 59 லட்சம் தடுப்பூசிகளும், புதுச்சேரியில் 16.75 லட்சம் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.அதனால், முன்பு காணொலியில் பார்த்ததை நாம் இன்று நேரடியாக பார்க்க முடிகிறது. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை நாம் போட்டுக் கொள்ள மத்திய அரசு உதவியாக இருந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்க கடமைப்பட்டு இருக்கிறோம்.
வணிகம், வேலைவாய்ப்பு, ஆன்மிகம், சுற்றுலா என எல்லாவற்றிலும் புதுச்சேரி முதன்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ‘பெஸ்ட் புதுச்சேரி’ எனக் கூறினார்.மத்திய உள்துறை அமைச்சர் ‘டீம்’ என்ற கொள்கையை கொடுத்துள்ளார். இது, வெளிப்படையான நிர்வாகம், அதிகாரமளித்தல், தன் நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கியது. அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு கொள்கைகளும் (பெஸ்ட் – டீம்) ஒன்றாக இணைந்தால் புதுச்சேரி சிறப்பான வளர்ச்சி அடையும்.விரைவில் நாம், புதுச்சேரியை வளர்ச்சியடைந்த மாநிலமாக பார்க்கப் போகிறோம். அதற்கு, பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.மத்திய அரசின் வழிகாட்டுதலோடு ‘புதுச்சேரி மாடல்’ என்ற புதுமையான வளர்ச்சித் திட்டத்தை விரைவில் பார்க்க இருக்கிறோம்.
மழை போல அரசாட்சி நடைபெற வேண்டும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி மத்தியில் பிரதமர் மோடியும், மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமியும் மழையாக இருந்து வருகின்றனர்.அமைச்சர்கள் முதல்வருக்கு உற்ற துணையாக இருப்பவர்கள்.
மத்திய அரசிடம் இருந்து தொடர்ந்து பெற்ற வழிகாட்டுதல் காரணமாக நாம் கொரோனாவை வெற்றி பெற்றிருக்கிறோம்.இந்த நிகழ்வு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய மைல் கல். யாரெல்லாம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அவர்கள் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement