பெரம்பலூர்:
கரூரை பூர்வீகமாக கொண்டவர் முனியப்பன்(வயது 48). இவர் மயிலாடுதுறை சீர்காழி வாய்க்கால் கரை தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைவாணி (40). இந்த தம்பதியருக்கு ஹரிணி (13), கார்முகிலன் (5) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.
முனியப்பன் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சீர்காழியிலேயே வசித்து வந்தார். விடுமுறை நாட்களில் சொந்த ஊரான கரூருக்கு செல்வது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கரூருக்கு குடும்பத்துடன் சென்ற அவர், நேற்று இரவு சீர்காழிக்கு காரில் திரும்பினார்.
காரை முனியப்பன் ஓட்டி சென்றார். காரில் அவரது மனைவி கலைவாணி, தாயார் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் முகிலன் ஆகியோர் இருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பியதால் திருச்சி-சென்னை ரோட்டில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் மற்றும் இதர வாகனங்கள் சாலையின் இருபக்கங்களிலும் அணிவகுத்து நின்றன. இதில் முனியப்பன் இன்று அதிகாலை 4 மணி அளவில் மாட்டிக்கொண்டார்.
இந்த நிலையில் அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றிக்கொண்டு பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக முனியப்பன் ஓட்டி சென்ற காரில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அப்பளம்போல் நொறுங்கியதுடன் காருக்கு முன்னால் நின்ற லாரியின் அடியில் போய் சிக்கி கொண்டது.
இந்த கோர விபத்தில் முனியப்பன், அவரது மனைவி கலைவாணி, மகள் ஹரிணி, தாயார் பழனியம்மாள் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். சிறுவன் கார் முகிலன் மட்டும் லேசான காயத்துடன் உயிர் தப்பினான்.
இந்த விபத்து பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
நெரிசலில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டிருந்தபோது லாரி டிரைவர் முந்தி செல்ல முயன்றபோது விபத்து நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாளை (48) பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.