தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு என்ற இரண்டு உயர் பதவிகளை வகித்து வருகிறார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அண்மையில், காஞ்சி காமக்கோடி பீடத்தின் சங்கராச்சாரியார் விஜயேந்திரரை, சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது, விஜயயேந்திரர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பொன்னாடையை அளித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் கந்தகிரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஸ்வர்ண பந்தன மஹா கும்பாபிஷேகம் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காஞ்சி காமக்கோடி பீடத்தின் சங்கராசாரியாரான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையேற்று நடத்தினார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த மஹா கும்பாபிஷேக விஷாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சங்கராச்சாரியர் விஜயேந்திரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது, விஜயேந்திரர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பொன்னாடையை வழங்கினார். விஜயேந்திரர் அந்த பொன்னாடையை தமிழிசையின் கையில் கொடுக்காமல், தூக்கி போட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது பதிவான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”