இலங்கை வாழ் மக்களின் துயரங்களைக் கண்டு, கண்கலங்கி பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். இலங்கை கவிஞர் அஸ்மின் வரிகளில் இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில் “நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க…” என உருவான இந்தப் பாடலை டி.ஆர். பாடியிருக்கிறார். இந்தப் பாடலை சென்னையில் வெளியிட்ட டி.ஆர், அந்த நிகழ்வில் பேசியதிலிருந்து…
“இலங்கையில் பதற்றமான சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி… அங்கே வசிக்கக்கூடிய இலங்கை மக்கள் குறிப்பாக ஈழத்து தமிழ் மக்கள் துயரத்தில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டும், கஷ்டத்தைத் தீர்க்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். ராமர் பாலம் கட்ட அணில் உதவியது போல, அதில் நானும் குரல் கொடுத்திருந்தேன். என்னதான் பூவிடம் வாசம் இருந்தாலும், அந்த பூவிடம் உள்ள வாசத்தை கொண்டு சேர்த்தது தென்றல் காற்று என்பதைப் போல என் கருத்தை கொண்டு சேர்த்தமைக்கு நன்றி. இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது.
இதற்காக மத்திய அரசுக்கு நன்றி. இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு அங்கே பால் கிடைக்கல. பட்டினியா இருக்காங்க. பாலோட விலை ஒரு லிட்டர் 1,200 ரூபாய். கோழிக்கறி ஒரு கிலோ 1,000 ரூபாய். பெட்ரோல் விலை 350 ரூபாய்… கேஸோட விலை 5,000 ரூபாய்.
நாட்டுல மக்கள் கையில இல்ல காசு. கிடைக்கல கேஸு. சமைக்க முடியல. எங்களது லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி, 19வது ஆண்டுவிழா நாளை… இந்த ஈழத்தமிழர்களுக்காக நான் தொடர்ந்து முழக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். மனித நேயத்தோடு சொல்றேன். இலங்கை வாழ்மக்கள் நல்லா இருக்கணும். ஈழமே என் இதயமே! யாழ் பாணமே என் கானமே… உனக்கு யார் செய்தார்கள் இந்தத் துரோகமே… ஏன் இப்படி ஆகிவிட்டாய் சோகமே… யாழிசைத்த இலங்கை… என் இதயநாத மேடையிலே ஒலிக்கும் சலங்கை… என் இலங்கை வாழ் மக்களின் கையிலும் காலிலும் யார் போட்டார்கள் விலங்கை…” என ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.