மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர் தங்கவேலு இன்று விடுத்துள்ள அறிக்கையில், “வளர்ச்சி என்பது மக்களுக்கும், சூழலுக்கும் பாதிப்பில்லாமல் இருக்கவேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தொழிற்சாலை வளர்ச்சியால் சூழலும், மக்களும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஒரு நிகழ்வை அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
சென்னை மணலி சடையன்குப்பம், பர்மா நகர் பகுதியில் தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பகுதியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த தொழிற்சாலையின் அருகில் இருளர் மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான புகை தொடர்ந்து வெளியேறி வருவதாகவும், இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்படி அதிகப்படியான புகையைத் தொடர்ந்து வெளியேற்றி வருவது குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு சென்ற வருடம் நாங்கள் வழங்கிய மனுவிற்கு, பதிலளித்த தமிழக அரசு அந்த தொழிற்சாலையில் தாங்கள் ஆய்வு மேற்கொண்டதாகவும் உலோக குப்பைகளை கொட்டும் போது மட்டும் அதிகப்படியான புகை வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொடர்ச்சியாக ஆலைக்குச் சுற்றுப்புறத்திலுள்ள மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இது ஒரு மக்கள் போராட்டமாக மாறும் முன் தமிழக அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் உடனடியாக மறு ஆய்வு மேற்கொண்டு, அந்த இடத்தில் காற்றின் தன்மை (Air Quality) என்ன என்பது குறித்தும் அருகில் இருக்கும் மக்களின் கருத்தை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.
மக்கள் நீதி மய்யம் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு ஆதரவான கட்சி என்றாலும், அது மக்கள் நலனுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ கேடாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது. எனவே தொழிற்சாலைகளே சுற்றுச்சூழலைக் கருத்தில்கொண்டும், ஆலையைச் சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டும் உரிய தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றி வெளியேறும் அதிகப்படியான புகையைக் கட்டுப்படுத்தவும், புகையில் நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்”
இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர். தங்கவேலு தெரிவித்துள்ளார்.