புதுச்சேரி: பிரதமர் கூறியவாறு ‘பெஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கிவிட்டுதான், தேர்தலுக்கு உங்களை சந்திக்க வருவோம்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். புதுச்சேரி, கம்பன் கலையரங்கில் நடந்த அரசு விழாவில், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
மகான் அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்தேன். நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, அரவிந்தரின் 150வது பிறந்த நாள் ஆண்டு வாழ்த்துக்கள்.புதுச்சேரி பலதரப்பட்ட தியாகிகள் வாழ்ந்த கர்ம பூமி. பாரதியார், மகான் அரவிந்தர் இங்கிருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர். புதுச்சேரி வி.வி.எஸ்.அய்யர், பாரதிதாசன், சுப்பையா போன்றோரை தேசத்துக்கு சேவை செய்ய அனுப்பியது.
புதுச்சேரி மக்களாகிய உங்களின் தீர்ப்பால், முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி கூறிய ‘பெஸ்ட் புதுச்சேரி’யை உருவாக்கிவிட்டுதான், தேர்தலுக்கு உங்களை சந்திக்க வருவோம் என, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அதன் ஒருகட்டமாகத்தான் இன்று, ரூ.362.91 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை நவீன யூனியன் பிரதேசமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் புதுச்சேரியில் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் 90க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 லட்சம் பயனாளிகள் மத்திய அரசின் நேரடி பயனை பெறும் வகையில் பிரதமரின் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, நிதி செலுத்தப்பட்டுள்ளது.திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது. 99 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடக்கிறது. மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத, முற்றிலுமாக காஸ் மட்டும் பயன்படுத்தும் மாநிலமாக புதுச்சேரியை பிரதமர் மாற்றியுள்ளார்.
புதுச்சேரியில் 26 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வீடுகூட இங்கு மின்சாரம் இல்லாமல் இல்லை. நுாறு சதவீத நகர்ப்புற, கிராமப்புற சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன.நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டமும் முழுமை அடைந்துள்ளது.காங்., ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல் மட்டுமே இருந்தது. ஏழைகளைப் பற்றி கவலைப்படாமல் பொய்யான ஆட்சி நடந்து வந்தது.ஆனால், இன்று என்ஆர்.காங்.,- பா.ஜ., ஆட்சியில் மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.பிரதமர் மோடி கூறியபடி, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ‘பெஸ்ட் புதுச்சேரி’யாக மாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேல், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமித்ஷா துவக்கி வைத்த திட்டங்கள்
l சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.6.07 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பிரெஞ்ச் மற்றும் தமிழ் கலாசாரத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், ரூ.3.5 கோடி மதிப்பில், துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்ட குடோன்கள் திறப்பு.
l புதுச்சேரி பல்கலையில் ரூ.48.64 கோடி மதிப்பில் இயற்பியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளுக்கு கூடுதல் கட்டடங்கள்.
l ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.31.5 கோடியில் பஸ் நிலையம் புதுப்பித்தல்.
l கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.15.75 கோடி மதிப்பில் புதிய பேருந்து முனையம் அமைத்தல்.
l ரூ.157.50 கோடி மதிப்பில் பெரிய வாய்க்காலை ஆழப்படுத்தி, அழகுப்படுத்துதல்.
l ரூ.15.75 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா விரிவாக்கம் செய்தல்.l ரூ.5.25 கோடி மதிப்பில் நகரில் வனம் உருவாக்குதல் .
l ரூ.45.50 கோடி மதிப்பில் குமரகுருபள்ளத்தில் 216 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுதல்.
l ரூ.33.45 கோடி மதிப்பில் அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலைப் பணி.