கர்நாடக மாநிலத்தில், மாணவர்கள் பைகளில் பைபிள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தனியார் பள்ளி ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் ஒன்று தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிகளில் மாணவர்கள் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் உள்ள ஆடைகளை அணிய தடை விதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில், தற்போது, மாணவர்கள் பைபிள் எடுத்து வர வேண்டும் என்ற தனியார் பள்ளியின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான அனுமதியை மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் பெற்றுக் கொண்டதாகவும், மாணவர்களுக்கு நன்நெறி, ஆன்மீக கருத்துக்களை பள்ளி போதிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளியின் இந்த உத்தரவுக்கு வலதுசாரி, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இது
கர்நாடகா
கல்வி சட்டத்திற்கு எதிரானது என சில அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா கல்வி அலுவலர் பள்ளியை பார்வையிட உள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் கர்நாடக கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் உள்ள இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் மாநில செய்தி தொடர்பு அதிகாரி மோகன் கவுடா கூறியதாவது:
கிளாரென்ஸ் உயர்நிலை பள்ளியில் கிறிஸ்தவர்கள் அல்லாத மாணவர்களும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அவர்கள் பைபிளை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த அறிவிப்பு மதத்திற்கு எதிரான சதிச்செயல். இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 25 மற்றும் 30 ஆகியவற்றை மீறும் செயல் இது.
சுப்ரீம் கோர்ட்டு கூட பிற மதம் சார்ந்த குழந்தைகள் மீது மதம் சார்ந்த போதனைகளை ஒருவரும் திணிக்க கூடாது என்று தெரிவித்து உள்ளது. அதனால், சுப்ரீம் கோர்ட்டையும் மதிக்காமல் விதிமீறிய செயலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அந்த குழந்தைகளின் பெற்றோரும் எங்களுடன் உள்ளனர். இதுபற்றி கர்நாடக கல்வி அமைச்சரை சந்தித்து புகார் அளிக்கப்படும். அந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.