மாதிரி நீதிமன்ற போட்டி: தஞ்சாவூர் கல்லூரி முதலிடம்| Dinamalar

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சட்டக் கல்லுாரியில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் முதலிடம் பிடித்த, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழக அணிக்கு, டி.வி.லட்சுமிநாராயணன் மெமோரியல் விருதாக 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், 39வது தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி கடந்த 22ம் தேதி துவங்கியது. இதில் நாடு முழுதும் இருந்து 35 சட்டக் கல்லுாரி, பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.சுற்றுச்சூழல் சம்பந்தமான புனைவு வழக்கு தொடுக்கப்பட்டு, வாதிடப்பட்டது.இறுதி போட்டி நேற்று நடந்தது.

சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா, சிவஞானம், குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழக இயக்குனர் சாந்தகுமார் அடங்கிய நடுவர் குழுவினர் சிறந்த அணியை தேர்வு செய்தனர்.பரிசளிப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.நீதிபதி ராஜா பேசும்போது, ‘சட்டக்கல்லுாரி மாணவர்கள் தங்களது மாணவ பருவத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக மாதிரி நீதிமன்றம் உதவும்’ என குறிப்பிட்டார்.

நீதிபதி சிவஞானம் பேசுகையில், ‘இன்றைக்கு உலக அளவில் சுற்றுச்சூழல் தான் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் சுற்றுச்சூழல் சார்ந்த புனைவு மாதிரி நீதிமன்ற போட்டிகள், சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்தும்’ என்றார்.

போட்டியில் முதலிடம் பிடித்த தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கு டி.வி. லட்சுமிநாராயணன் மெமோரியல் விருதாக 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.இப்பரிசை, டி.வி. லட்சுமிநாராயணன் மெமோரியல் விருதினை ஏற்படுத்திய, அவரது குடும்பத்தினர் முன்னாள் சட்டக்கல்லுாரி மாணவர் அருணாசலம், அவரது சகோதரர் டாக்டர் வாசுதேவன், டாக்டர்கள் உஷா வாசுதேவன், அக் ஷயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து வழங்கினர்.

இரண்டாம் இடம் பிடித்த செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரிக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.சிறந்த மாணவர் வழக்கறிஞராக சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சுவராஜ், சிறந்த மாணவி வழக்கறிஞராக வேலுார் அரசு சட்டக்கல்லுாரி மாணவி திவ்யபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.சிறந்த எழுத்துமுறை வாதத்திற்காக மதுரை அரசு சட்டக்கல்லுாரிக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.