மின்சார தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசின் மீது பழிபோடுவது சரியல்ல- ஜெயக்குமார்

சென்னை:

தேர்தல் வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் இன்று நேரில் ஆஜராகி கையெழுத்து போட்டார். பின்னர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

“தமிழகத்தில் கவர்னருக்கு பாதுகாப்பு இல்லை. காவல் துறைக்கும் பாதுகாப்பு இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவலரை தாக்கி உள்ளனர். ராயபுரத்தில் காவலரை இழிவான வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

இப்படி பரிதாபமான நிலைக்கு காவல் துறை ஆளாகி இருக்கிறது. தவறு செய்வோரை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும். அவர்கள் விசாரித்து உரிய நபர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தால் மட்டுமே லாக் அப் மரணங்களை தடுக்க முடியும். போலீசார் விசாரித்தால் அவர்களுக்கு ஆதரவாகத்தான் அமையும். திமுக அரசின் தவறுகள் குறித்து அதன் தோழமை கட்சிகள் குரல் கொடுக்காமல் இருக்கின்றன.

இதனை மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். தமிழகத்தில் செயற்கையான மின்சார தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விட்டு, மத்திய அரசின் மீது அரசு பழி போடுவது சரியல்ல. 2113 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது பொதுமக்களை இருட்டுக்குள் தள்ளி கஷ்டபடுத்தும் இந்த பாவம் சும்மா விடாது’’.

இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.