இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பிய 10 இந்திய யூடியூப் சேனல் மற்றும் 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் என மொத்தம் 16 யூடியூப் செய்தி சேனல்களை மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டு உள்ளது.
தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை விதித்தது.
இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களை முடக்கி, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய சேனல்கள் மட்டுமன்றி, பாகிஸ்தான் சேனல்களும் இதில் அடக்கம்.
இந்தியாவை சேர்ந்த 10 சேனல்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐடி விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள், இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொது ஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன. தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் விதி 18-ன் கீழ் தேவைப்படும் தகவல்களை அவர்கள் யாரும் அமைச்சகத்திற்கு வழங்கவில்லை” என்று கூறியுள்ளது. இந்த சேனல்களின் வீடியோக்களுக்கு, 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.