மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாக அதன் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல், தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்து மோசமான சாதனையை படைத்துள்ளது.
இதனால் கடுமையான விமர்சனங்களை அந்த அணித் தலைவரும், அணி நிர்வாகமும் சந்தித்து வருகின்றனர். நெருக்கடியான இந்த சூழலில் அடுத்த போட்டிக்கு எப்படி தயாராவது என மும்பை இந்தியன்ஸ் ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் அணியில் மாற்றங்களை கொண்டு வர தயாராக இருப்பதாக தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.
தொடரில் முன்னேற பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் இருக்குமா என்று ஜெயவர்த்தனேவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ‘நல்ல கேள்வி. நான் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் மற்ற பயிற்சியாளர்களுடன் இது குறித்து பேசி சில திட்டங்களை உருவாக்க வேண்டும்’ என்றார்.
மேலும் அணி குறித்து பேசிய ஜெயவர்த்தனே, ‘பேட்டிங் செய்வது எங்களுக்கு கவலையாக உள்ளது, குறிப்பாக நல்ல விக்கெட்டுகளில். இந்த அனுபவம் வாய்ந்த குழுவானது கடினமான நேரங்களை புரிந்துகொண்டு நன்றாக செயல்பட்ட ஒன்று.
நாம் மாற்றங்களை கொண்டு வந்து அதனை செய்ய வேண்டும் என்றால், நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
பேட்டிங்கை சீராக வைத்திருக்க விரும்பினோம். முதலில் பேட்டிங் செய்கிறோமா அல்லது இலக்கை விரட்டி பிடிக்கிறோமா என்பதில் நாங்கள் நிலையாக இல்லாததால் சரிவை சந்தித்து விட்டோம்.
இஷான் கிஷண் கொஞ்சம் கஷ்டப்பட்டார், அவருடைய ஆட்டத்தை விளையாட நங்கள் சுதந்திரம் கொடுத்துள்ளோம். இதுவரை அவருடன் நான் பேசவில்லை. ஆனால் விரைவில் அவருடன் உரையாடுவேன்’ என தெரிவித்துள்ளார்.