ஸ்டாக்ஹோம்: ராணுவத்துக்கான செலவுகளை மேற்கொள்வதில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது. இது, இதுவரை கண்டிராத உச்சபட்ச செலவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் ராணுவத்துகாக அதிகமாக செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 4 மற்றும் 5-ஆம் இடங்களை முறையே பிரிட்டனும், ரஷ்யாவும் பிடித்துள்ளன. இந்த ஐந்து நாடுகளும் சேர்ந்த உலகின் ஒட்டுமொத்த ராணுவ செலவினங்களில் 68 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளன.
கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போதும்கூட உலகளவில் ராணுவத்திற்கான செலவு, வரலாற்று சாதனை படைத்துள்ளதாக, அந்த தனியார் ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் டியாகோ லோபெஸ் தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் பணவீக்கப் பிரச்சினையால் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்த போதும் கூட ராணுவத்திற்கான செலவு 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
2020-இல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.2 சதவீதமாக இருந்த நிலையில், 2021-இல் ராணுவத்துக்கான செலவு உலக ஜிடிபியில் 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாடுகள் வாரியாகப் பார்த்தால், அமெரிக்கா 2021-இல் 801 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவ மேம்பாட்டுக்காக செலவு செய்துள்ளது. அதுவும் குறிப்பாக ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு மட்டும் 24 சதவீதம் செலவு செய்துள்ளது. ஆயுத கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு 6.4 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
சீனா இதே காலக்கட்டத்தில் 293 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளது. இது 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 4.7 சதவீதம் அதிகம்.
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா 76.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளது. 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியா ராணுவத்துக்கான செலவை 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா உள்நாட்டு ராணுவத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் பலப்படுத்தும் விதமாக 2021 ராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 64 சதவீதத்தை உள்நாட்டு ராணுவ தயாரிப்புகளை வாங்க செலவழித்துள்ளது.