சென்னையில், கடனாக கொடுத்த 10 லட்சம் ரூபாய் திருப்பிக் கேட்ட பேராசிரியரிடம் பணம் தருவதாக வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம் பெண்ணோடு நெருக்கமாக இருப்பது போன்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மிரட்டியதாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். 60 வயதான இவர் மத்திய அரசுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்
இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நபர் மூலமாக ராதா என்ற 40 வய்து பெண் சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்த நட்பின் காரணமாக, சுய தொழில் தொடங்குவதாக கூறி ராதா, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வரை ராஜேந்திரனிடம் கடனாக பெற்றுள்ளார்.
நீண்ட நாட்களாகியும் பணத்தை திருப்பி தராத காரணத்தினால் ராஜேந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு ராதா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், வழக்கு விசாரணைக்கு ராதா சரியான முறையில் ஆஜராகாத காரணத்தினால் சமீபத்தில் ராதாவிற்கு நீதிமன்றத்தால் பிடியானை பிறப்பிக்கப்பட்டது
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதா சமீபத்தில் ராஜேந்திரனை தொலைபேசியில் அழைத்து பணத்தைத் தந்து விடுவதாகவும் மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் கெஞ்சிக் கேட்டுள்ளார்
கடந்த 19ம் தேதி ராதாவின் அழைப்பின் பேரில் , தனது பணத்தை திரும்ப பெறுவதற்காக, கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் முதல் தெரு பகுதியில் உள்ள ராதாவின் தோழி புஷ்பா என்பவரது வீட்டிற்கு ராஜேந்திரன் சென்றுள்ளார்.
அங்கு ராஜேந்திரன் வந்தவுடன் அவரிடம் மன்னிப்புக்கேட்ட ராதா, தான் தவறை உணர்ந்து விட்டதாக கூறி ராஜேந்திரனுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதனை அருந்திய சில நிமிடங்களில் ராஜேந்திரன் மயங்கியவுடன் லட்சுமி என்ற 30 வயது பெண்ணுடன் அவர் நெருக்கமாகக இருப்பது போன்று போட்டோ மற்றும் வீடியோவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, இந்த ஆபாச வீடியோ எடுப்பதற்கு லட்சுமியின் கணவர் முருகன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.
ராஜேந்திரன் மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் இனி பணம் கேட்டால் நீ லட்சுமியுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டி வீட்டில் இருந்து விரட்டி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன், தனக்கு நேர்ந்த இந்த அவமானம் குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
இதையடுத்து பிளாக்மெயில் கும்பலுக்கு லீடராக செயல்பட்ட கோயம்பேடு ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகாவை சேர்ந்த லட்சுமி , கொடுங்கையூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புஷ்பா மற்றும் லெட்சுமியின் கணவர் முருகன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த செல்போன்களில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை கைப்பற்றினர்.
வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தனக்கு தெரிந்த 3 வது நபரின் துணையோ சாட்சியோ இன்றி , நீதிமன்றத்துக்கு வெளியில் முடிக்க நினைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்தச் சம்பவம்..!