தமிழகத்தில், சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆபாசமாகப் பேசுவது, மிரட்டல் விடுப்பது போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மாணவர்களின் ஒழுங்கீனச் செயல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன வேதனையையும் உண்டாக்கியிருக்கிறது. கடந்த வாரம் கூட திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவன் ஒருவன் ஆசிரியரை ஆபாசமாகத் திட்டி அடிக்கப் பாய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த நிலையில், வேலூரிலுள்ள ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்கள் மேஜை, நாற்காலிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை மேலும் கூட்டியிருக்கிறது. நடந்தது குறித்து விசாரித்தோம்.
வேலூர் தொரப்பாடி பகுதியிலிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். இன்று செய்முறைத் தேர்வு தொடங்கியதையொட்டி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்பாகவே பள்ளி விடப்பட்டது. ப்ளஸ் டு ‘சி’ பிரிவு மாணவர்கள் வீட்டுக்குப் புறப்படாமல் தங்களது வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அங்கு வந்து கண்டித்த ஆசிரியர்களை மாணவர்கள் மிரட்டும் தொனியில் முறைத்திருக்கிறார்கள்.
இது குறித்து, பாகாயம் போலீஸாருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸார் வருவதையறிந்து, மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளியில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் இன்று நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அவர்களிடம் விசாரணை நடத்தி கண்டித்தார். விசாரணையில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பிரிவு உபசார விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், இதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், ‘வரும் 5-ம் தேதி தொடங்கவிருக்கும் பொதுத்தேர்வுக்கு வந்தால் போதும்’ எனவும் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ‘‘இதுபோன்று ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நன்றாகப் படித்து சமூகத்திற்கு நன்மைப் பயக்குபவர்களாகவும், பெருமைச் சேர்ப்பவர்களாகவும் மாணவர்கள் இருக்க வேண்டும்’’ எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.