சூர்யா-ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள படம் தான் ஓ மை டாக். இந்தப் படத்தை சரோவ் சண்முகம் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓ.டி.டி தளமான அமேஸான் பிரைமில் படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
செல்லப் பிராணியான நாய் மீது பாசம் கொண்டவர்களுக்கும், நாய் வளர்க்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற படம் இது.
பிறவியிலேயே கண்களில் பிரச்னையுடன் பிறக்கும் நாய் குட்டியை அதன் உரிமையாளர் கொல்ல முடிவெடுக்கிறார்.
அதிர்ஷ்டவசமாக அவரிடமிருந்து தப்பிய அந்த நாய் குட்டியை எடுத்து வளர்க்க முடிவு செய்கிறார் அர்ஜுன்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து நாய்க்கு கண் பார்வையை கொண்டு வர வைக்க முயற்சி செய்கிறார்.
அவரது முயற்சி நிறைவேறியதா? என்பதே படத்தின் கதை.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் நாய்க் குட்டியை வளர்க்க அர்ஜுன் முயற்சி செய்வது, பள்ளிக்கு எடுத்துச் சென்று மாட்டிக் கொள்வது என முதல் பாதி நகர்கிறது.
பிற்பாதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அர்ஜுனாக நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் அறிமுகமாகியுள்ளார். அவரின் தந்தையாக அருண் விஜய் நடித்துள்ளார். தாத்தாவாக நிஜ தாத்தா விஜயகுமார் நடித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலை முறை நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்து அசத்தியிருக்கின்றனர்.
மிரட்டலான கதாபாத்திரத்தில் வினய் நடித்திருக்கிறார். டாக்டர் படத்தை போன்று இந்தப் படத்திலும் வில்லன் வேடம் தான். ஆனால், குழந்தைகள் ரசிக்கும் வகையிலான வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.
நடிகர் விஜயகுமாருக்கு அதிகம் வேலை இல்லை. அருண் விஜய்யின் மனைவியாக மகிமா நம்பியார் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். மனோ பாலா, கவண் பிரயதர்ஷினி என நமக்கு தெரிந்த நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர்.
போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக நாய்க்கு டிரைனிங் கொடுக்கும் காட்சி, நண்பர்கள் நாய்க் குட்டியை கேலி செய்யும்போது உடைந்து அழும் காட்சி என ஆர்னவ் விஜய் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அருண் விஜய் உடைந்து அழும் காட்சி நம் கண்களை குளமாக்கிவிடுகிறது. நிவாஸ் கே பிரசன்னா, படத்திற்கு தேவையான பின்னணி இசையை அளித்திருக்கிறார்.
சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் இவர்தான் ஹீரோ.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் லாஸ்லியா படம்
குழந்தைகள் மிகவும் விரும்பிப் பார்க்கும் வகையிலான காட்சிகளும், அவர்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான கருத்தும் இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் நிச்சயம் இந்தப் படத்தை கொண்டாடலாம்.