மெக்கானிக்கல் இன்ஜினியரான ராகுல் தனது துறையை விட்டு விலகி, மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக UPSC தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர். தற்போது சென்னையில் IPS பயிற்சியில் இருக்கும் அவர், தன்னை நெல்லைக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.
“நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். ஆனால் எனக்கு ஏனோ அந்தத் துறையில் ஈடுபாடு வரவில்லை. அதனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழுந்ததும்,UPSC தேர்வுக்குத் தயாராவது என முடிவெடுத்தேன். பெற்றோரும் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள். நான் சென்னையில் வளர்ந்தாலும் இயல்பில் நெல்லைக்காரன். அப்பா வங்கியில் பணியாற்றியதால் சென்னையில் செட்டில் ஆனோம். இப்போதும் எனது உறவினர்கள் நெல்லையில்தான் இருக்கிறார்கள். அதனால் எனக்குச் சொந்த ஊர் மீது அதிக ஈடுபாடு உண்டு. சிறுவயதில் அடிக்கடி வந்திருக்கிறேன். இப்போது வருடத்துக்கு ஒருமுறை வந்து செல்கிறேன்.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் UPSC தேர்வுக்கு தயாரானேன். இயல்பிலேயே எனக்கு எப்போதுமே படிப்பதில் ஆர்வம் அதிகம். நான் எப்போதுமே சும்மா இருப்பதில்லை. ஏதாவது படித்துக் கொண்டே இருப்பேன். நான் படிக்காமல் சும்மா இருந்தால்தான் எனக்கு போர் அடிக்கும். அதனால் குடிமைப் பயிற்சித் தேர்வுக்குத் தயாராவதற்காக நிறையப் படிக்கத் தொடங்கினேன். ஓராண்டு காலம் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். அதன் பிறகு தேர்வு எழுதினேன். ஆனால் என்னால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடியவில்லை. அதற்காக நான் சோர்ந்து விடவில்லை. அடுத்த வாய்ப்புக்குச் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாகப் படித்தேன்.
பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள்.
என்னைப் பொறுத்தவரை, இவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்கிற நேரக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வதில்லை. அதே போல இரவு முழுவதும் கண்விழித்துப் படிக்க வேண்டும் என்றும் செயல்படுவதில்லை. அவசியமான நேரங்களை நான் தவறவிடுவதில்லை. முதலில் தேர்வு எழுதியபோது பிரிலிமினரி மட்டுமே தேர்வாக முடிந்தது. இரண்டாவதாக தேர்வு எழுதியபோது இரு தேர்வுகளையும் கடந்து இன்டர்வியூவிலும் சிறப்பாக வெற்றி பெற்று IPS ஆகத் தேர்வானேன். எந்தக் குழப்பமும் இல்லாமல் மனதை இலகுவாக வைத்துக் கொண்டு நிதானத்துடன் படித்தால் வெற்றி கைகூடும்” என்று சொல்லும் ராகுல் IPS, நெல்லையில் மே 1-ம் தேதி ஆனந்த விகடன் சார்பாக நடக்கவுள்ள UPSC தேர்வுக்கான பயிற்சி முகாமில் கலந்துகொண்டு போட்டித் தேர்வர்களுக்கு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்.
குடிமைப் பணியில் சேவையாற்றி வரும் மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள். அந்தப் பயிற்சி முகாமில் பங்குபெற கீழே உள்ள லிங்கில் பதிவு செய்யுங்கள்.
பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இந்த லிங்கில் பதிவு செய்யுங்கள்.