எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டு வருகிறது இந்தியா. இதுவரை இல்லாத அளவு கடந்த மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி கடந்த மாதம் 1.67 பில்லியன் அமெரிக்க டாலரை தொட்டது. இது 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 1.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி 49 சதவீதம் அதிகரித்து 11.0 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இது கடந்த 2020ம் ஆண்டு இதே காலத்தில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பது கவனிக்கதக்கது.
கடந்த 2021 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை எலக்ட்ரானிக் பொருட்கள் அதிகம் ஏற்றுமதி செய்யபட்ட முதல் 5 நாடுகளில், அமெரிக்கா (18%), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (16.6%), சீனா (7.6 %), நெதர்லாந்து (4.5%) மற்றும் ஜெர்மனி (4.2%) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் செல்போன்கள் அதிகப் பங்கு வகிக்கின்றன. லேப்டாப்கள், டேப்லட்கள், டி.வி மற்றும் ஆடியோ, தொழிற்சாலை எலக்ட்ரானிக் பொருட்கள், வாகன எலக்ட்ரானிக்ஸ், எல்.இ.டி பல்புகள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. 2020 மார்ச் – 2021 ஏப்ரல் வரையிலான கடந்த நிதியாண்டில் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஏற்றுமதி 11.11 பில்லியன் டாலர் ஆகும். இதன்மூலம் இத்துறை இதுவரை கண்ட அனைத்து சாதனைகளையும் முறியடிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.