மும்பை: மும்பை அருகே பெட்ரோல் பங்க்கில் இருந்து திருடிய ஜேசிபி வாகனம் மூலம் ஏடிஎம் மிஷினை கொள்ளையடித்த நிலையில், அந்த வாகனம் பாதி வழியில் பள்ளத்தில் விழுந்ததால் ₹27 லட்சம் தப்பியது. மகாராஷ்டிர மாநிலம் சாங்லி பகுதியில் உள்ள ஏடிஎம்மில் ஜேசிபி இயந்திரம் மூலம் கொள்ளையடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 24ம் தேதி நள்ளிரவு சாங்லியின் மிராஜ் பகுதியில் இருந்த தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்தனர். அவர்கள் ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்று திருடினால் அங்குள்ள சிசிடிவி கேமராவில் ஆட்களின் முகம் பதிவாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஜேசிபி இயந்திரத்தை ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே தள்ளினர். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை ஜேசிபி வேறோடு பிடுங்குவது என்று சொல்வது போல், அப்படியே அலேக்காக தூக்கியது. பின்னர் அப்படியே பின்னோக்கி சென்ற ஜேசிபி வாகனம், அங்கிருந்து ஏடிஎம் இயந்திரத்துடன் புறப்பட்டு சென்றது. ஆனால், அடுத்த சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தில் விழுந்த ஜேசிபி வாகனம் விபத்தில் சிக்கியது. அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் பள்ளத்தில் விழுந்த ஜேசிபி வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தையும் அவர்களால் எடுக்க முடியவில்லை. ஜேசிபியையும் எடுத்து செல்ல முடியவில்லை. அதனால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 27 லட்சம் தப்பியது. ஜேசிபி மற்றும் ஏடிஎம் இயந்திரத்தை மீட்டுள்ளோம். கொள்ளையர்கள் மீது வழக்குபதிந்து அவர்களை தேடி வருகிறோம். கைப்பற்றப்பட்ட ஜேசிபி வாகனமானது அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஜேசிபி வாகனத்தை திருடிவந்து, ஏடிஎம் மையத்தில் கைவரிசையை காட்டியுள்ளனர்’ என்றார்.