பிரதமர் மோடி குறித்து தனியார் நிறுவனம் எழுதிய புத்தகம் ஒன்றுக்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையில் பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு சில கருத்துகளை முன்வைத்திருந்தார். மேலும் மோடியின் ஆட்சியைப் பார்த்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என்ற வார்த்தையையும் சேர்த்திருந்தார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை முன்வைத்துவருகின்றனர். இந்த முன்னுரை இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கும் இடையே வாக்குவாதம் நீண்டுகொண்டே சென்றது.
தற்போது பாஜக-வும், விசிக-வும் புத்தகத்தை கையில் எடுத்து அரசியல் செய்துவருவதாக அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து சங்கத்தமிழன் என்பவர் அண்ணாமலையுடன் மோடி மற்றும் அம்பேத்கர் பற்றி விவாதிக்கத் தயார் எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, “பாஜக தமிழகத் தலைவருக்கு `அம்பேத்கரின் இந்துவத்தில் புதிர்கள்’ எனும் புத்தகத்தை வழங்க பாஜக அலுவலகத்துக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநிலச் செயலாளர் சங்கத்தமிழனிடம் கூறியுள்ளேன். எனவே, இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும்” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை ட்வீட் செய்திருந்தார்.
இதையொட்டி, அண்ணாமலை இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணன் தொல்.திருமாவளவனுக்கு பாஜக சார்பாக `மனுவாதமும் -ஆர்எஸ்எஸ்-ம்’ விஜயபாரதம் பதிப்பகம், `இந்துத்துவா அம்பேத்கர்’ – ம.வெங்கடேசன், `சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ – தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய `திருவாசகம்’ ஆகிய நான்கு புத்தகங்களை அன்போடு பரிசளிப்பதற்காக அலுவலகத்திலேயே வைத்துள்ளேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.