புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரத்தில் உள்ள ரயில் நிலையம் மிகவும் பழைமைவாய்ந்தது. இந்த வழித்தடத்தில் சென்னை – ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் நின்று சென்றுவந்தன. இதனால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பலரும் சிரமமின்றி பயணித்துவந்தனர். இதற்கிடையே கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, வழக்கம்போல் ரயில் சேவை தொடங்கிவிட்டபோதிலும் நமணசமுத்திரம் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமலேயே சென்றன.
இதனால் சுற்றுவட்டாரப் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதையடுத்து, ரயிலை நிற்க வலியுறுத்தி மக்கள் அரசிடம் பலமுறை கோரிக்கை முன்வைத்தனர். இதற்கிடையே பா.ஜ.க மாவட்டப் பொறுப்பாளரான செல்வம் அழகப்பன், மத்திய ரயில்வே இணை அமைச்சரிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்றிருந்தார். அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நமணசமுத்திரம் ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில்கள் நின்று செல்வது உறுதிசெய்யப்பட்டு, ரயில் சேவை தொடங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ கேப்டன் தமிழ்ச்செல்வன் கொடியசைத்து ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், “தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைந்துவருகிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சித் தலைவர்போலச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். அ.தி.மு.க எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. தி.மு.க ஆட்சியில் என்னென்ன நடக்கக் கூடாத விஷயங்கள் நடக்கின்றனவோ, அதை எதிர்த்து கேட்கக்கூடிய சக்தி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் மட்டும்தான் இருக்கிறது.
அவருடைய வேலையை மக்கள் விரும்புகிறார்கள். கவர்னர் பொதுவானவர், எந்தக் கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. தி.மு.க மட்டும்தான் கறுப்புக்கொடி காட்டிக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வினர் மனதில் அழுக்கு இருக்கிறது, அவர்களின் செயல்பாடுகளில் பிரச்னைகள் இருக்கின்றன. அதனால், கவர்னர் முன்னால் உட்காருவதற்கு பயப்படுகிறார்கள். இதுதான் உண்மை” என்றார்.