இந்தியாவில் அதிகரித்து மின் தேவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது என்றும் மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சாரத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடும் அடங்கும் என்பதே கவலைக்குரிய உண்மை. அண்மைக் காலமாக தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு மக்களை புழுக்கத்தில் தள்ளி இருக்கிறது.
கடந்த சில தினங்களாக நிலவும் இந்த மின்வெட்டு பொதுமக்களை புழுக்கத்திலும், கொசுக்கடியிலும் தள்ளியுள்ளது. மின்வெட்டால் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், மக்களை நேரடியாக பாதிக்கும் மின்வெட்டு பிரச்சினை மற்றும் நிலக்கரி பற்றாக்குறையை தமிழக அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பதை அனைத்து தரப்பினரும் உற்று கவனித்து வருகின்றனர். இதற்கிடையில், மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால், மின்வெட்டைத் தவிர்க்க அடுத்த 2 மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
நிலக்கரி பிரச்னையை அரசு சரியாக கையாளவில்லை எனவும் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். `30 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது. எனவே அச்சம் தேவையில்லை’ என மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நிலக்கரி உயர்வு மட்டுமல்லாமல் அதை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில் பெட்டிகள் பற்றாக்குறையும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்து கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தனது பதிவில் அவர், `மின்சாரத்தை சேமிக்க எங்களது கடமையை தொடர்ந்து செய்து வருகிறோம். இருந்தபோதிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின் வெட்டு நிலவுகிறது? பல ஆண்டுகளாக வரி செலுத்துபவராக இந்த கேள்வியை அரசிடம் கேட்கிறேன்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து மின் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து வளங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்தாண்டை விட இந்தாண்டு மின் தேவை அதிகரித்துள்ளது; இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்தாண்டு மார்ச் மாதம் அகில இந்திய மின் தேவை 8.9% உயர்ந்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் மின் தேவை 215-220 ஜிகா வாட் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 2.15 மணியளவில் 201.066 ஜிகா வாட் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM