ஒரு சில படங்களை நம் வாழ்நாளில் அவ்வளவு எளிதாக கடந்துவிடமுடியாது. அப்படியான ஒரு படம்தான் எட்டு தோட்டாக்கள். படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இயக்குநர் ஸ்ரீ கணேஷின் சிறப்பு நேர்காணல் இதோ…
முதல் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. படம் குறித்து தற்போது வரை அனைவரும் பேசி வரும் நிலையில் உங்களின் மனநிலை என்ன?
” நாளைய இயக்குநர் முடித்துவிட்டு 2 வருடம் வேறு ஒரு ஸ்கிரிப்ட் வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கும் போது தான் எதார்த்தமாக வெற்றியைச் சந்தித்தேன். 8 தோட்டாக்கள் நடக்க முக்கியமான காரணங்களுள் ஒன்று, வெற்றி என் மீது வைத்த நம்பிக்கை. வேறு ஸ்கிரிப்ட் சொல்லி வேலையும் ஆரம்பித்துவிட்டோம். ஆனால் எங்கள் இருவருக்கும் இது முதல் படம், ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமே என்று நினைத்து முன்னர் சொன்ன கதையைத் தவிர்த்துவிட்டு எழுதிய கதை தான் எட்டு தோட்டாக்கள்.”
வலுவான கதாப்பாத்திரங்களே இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். அதை எப்படித் தேர்வு செய்தீர்கள்?
“கதை எழுதும்போதே மனதில் வைத்து எழுதிய கதாபாத்திரம் எம்.எஸ் பாஸ்கர் சார்தான். அவரை நாம் பெரும்பாலான நேரங்களில் அப்பாவியாகதான் பார்த்திருப்போம். அவரை இந்த மாதிரியான ஒரு கேரக்டரில் காட்டினால் எல்லோருக்கும் சர்ப்ரைஸாக இருக்கும் என்று நினைத்து தான் இவ்வாறு எழுதினேன். இந்தப் படத்தில் வரும் நாசர் சார் கதாபாத்திரம் உண்மையில் என் வாழ்க்கையில் நான் பார்த்த நிஜ போலிஸ். முதலில் அவரது கதாப்பாத்திரத்திற்கு பசுபதி சாரைதான் தேர்வு செய்தேன். அவர் ஸ்கிரிப்டை எல்லாம் படித்துவிட்டு, ‘நான் என்ன செய்தாலும், அதை மூர்த்தி கேரக்டர் தூக்கி சாப்பிட்டு விடும்.
நீங்க எனக்கு மூர்த்தி கேரக்டர் கொடுங்க. அத நான் பண்றேன்’ என்றார். அதை எம்.எஸ் பாஸ்கர் சார் பண்ணா தான் சார் நல்லா இருக்கும் என்று நான் சொன்னவுடன், அவர் எதுவும் பேசவில்லை. பிறகு இரண்டு நாள் கழித்து கால் செய்து, ‘எம்.எஸ் பாஸ்கர் தாங்க இதுக்கு கரெக்டான ரோல்’ என்று சொன்னார். அதன் பிறகு எம்.எஸ் பாஸ்கர் சாருக்குமே அவர் கால் பண்ணி சொல்லியிருக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் சார் இந்தப் படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் பசுபதி சார்தான். நாசர் சாரைப் பொறுத்தவரைக்கும் அவருடைய மாணவன் நான். அவருடைய வகுப்புகளுக்கு எல்லாம் நான் சென்றிருக்கிறேன். அவர் முழுக்க முழுக்க என் மேல் உள்ள நம்பிக்கையில் தான் இப்படத்தில் நடித்தார்.
இந்த படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக 8 தோட்டாக்கள் காணாமல் போய் 8 கொலைகள் நடக்கும் விஷயம். வங்கியில் திருடிவிட்டு, அந்தப் பணத்தை ரோட்டில் தூக்கி போட்டுக்கொண்டே செல்வது. இந்த ரைட்டிங் எப்படி சாத்தியமானது?
“பொதுவாகவே ரைட்டிங்கில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, முதலில் முடிவு செய்து விட்டு, பின்னர் எழுதுவது. மற்றொன்று, நாவல் போல தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கும்போதே வரும் கற்பனைகளை சேர்த்துக்கொள்வது. நான் இரண்டாவது வகை. உண்மையில் அந்த வங்கி கொள்ளை வரைக்கும் தான் படம் யோசித்து வைத்திருந்தேன். அதன்பின் வருவதெல்லாம் எனக்கே படம் எடுக்கும்போது தெரியாது. மூர்த்தி உடன் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுமே அப்படிதான். எனக்கு இதில் இருக்கும் ஒரே வருத்தம் ஹீரோ வின் கதாப்பாத்திரத்தை இன்னும் பலமாக காட்சிப்படுத்தியிருக்கலாமோ என்பதுதான். இது குறித்து நான் வெற்றியிடம் கூட பலமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறேன். அவர் சரியாக நடிக்கவில்லை என்றெல்லாம் விமர்சனம் வந்தது. ஆனால் அது அவருடைய தப்பு அல்ல. நான் வடிவமைத்த பாத்திரம் தான் தவறு.
எம்.எஸ் பாஸ்கரை இதுவரை யாருமே பார்க்காத வேறு ஒரு கோணத்தில் இயக்குவது சவாலாக இருந்ததா?
எம் எஸ் பாஸ்கர் சாரின் அனுபவம் என்பது ரொம்ப பெரியது. அவர் ஒரு ப்ரொபஷனல் ஆக்டர். சூட்டிங்கின்போது எனக்கும் அவருக்கும் நிறைய தவறான புரிதல்கள் உண்டாகும். அவர் என்னைத் திட்டியிருக்கிறார். நான் நிறைய டேக் வாங்குவதாக எல்லாம் சொல்லியிருக்கிறார். அந்த கேன்டீன் காட்சியின்போது 17 டேக் எடுத்தோம். ஒவ்வொரு டேக்கிலும் ஒவ்வொரு மாடுலேஷன் காட்டினார். நான் என்ன நினைக்கிறேன் என்பதை சரியாக அவரிடம் என்னால் கடத்த முடியவில்லை.
ஆனால் இறுதியில் 17 வது டேக்கில் நான் சரி என்று சொன்னவுடன், ஒரே மீட்டரில் சிங்கிள் டேக்கில் அந்த சீனை நடித்து முடித்தார். அந்தக் காட்சி இன்று பார்த்தாலும் பொருத்தமாக இருக்கும். ஜெயகாந்தன், மனுஷ்யபுத்திரனின் எழுத்துக்கள்தான் அந்தக் கதாப்பாத்திரத்தில் பிரதிபலிக்கும். அந்தக் காட்சியில் எம் எஸ் பாஸ்கர் சார் சொல்லும் அந்த மனைவி கதாபாத்திரம் என்னுடைய பாட்டி கதை தான். அதை எழுதும்போதே நான் அழுதுவிட்டேன்.
படத்தில் இயக்குநர் வெற்றிமாறனுக்கும் கிரெடிட் கொடுத்துருந்தீங்க. அவருக்கு என்ன பங்கு ?
“வெற்றிமாறன் சார் எனக்கு நாளைய இயக்குநரில் நடுவராக இருந்தார். அவர் எங்களுடைய படங்களெல்லாம் பார்த்துவிட்டு ரொம்பவும் விமர்சிப்பார். ஆனால் என்னுடைய குறும்படங்களை மட்டும் நல்லமுறையில் கமென்ட் செய்வார். அவருடன் வேலை செய்ய நிறைய முயற்சி செய்தேன். ஆனால் மிஷ்கின் சாருடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. நான் இந்த படத்தை எடுத்துவிட்டு டீசர் வெளியிட சொல்வதற்காக அவரிடம் சென்றேன். டீசரைப் பார்த்துவிட்டு அவர், ‘இந்தப் படம் ஸ்ட்ரே டாக்ஸ் படத்தினுடைய தழுவலா? ‘என்று கேட்டார். ‘பாதி படம் தான் சார் அந்தப் படத்தோடு ஒன்றி வரும்’ என்று கூறினேன். உடனே ‘படத்தினுடைய டீசரை என்னால் வெளியிட முடியாது’ என்று கூறினார். ஆடுகளம் திரைப்படம் போல இந்தப் படத்திலும் நான் பிலிமோகிராப்பி போட்டிருக்கேன் சார் என்று கூறியவுடன் தான் டீசரை வெளியிட்டார்.
முதல் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுடைய அடுத்தப்படமான குருதியாட்டம் பற்றி…
கோவிட் இல்லையென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்திருக்கும். அது எதுவும் நம் கையில் இல்லை. எட்டு தோட்டக்கள் போலவே தான் இந்தப் படமும் இருக்கும். அதை போலவே இதையும் ஆடியன்ஸ் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.