ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அமைச்சர் சி.வி கணேசன் சட்டப்பெரவையில் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அதில் பதிலுரை வழங்கிய அமைச்சர் சி.வி.கணேசன்,
திமுக ஆட்சியில் வேலை வாய்ப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும், எத்தனை இளைஞர்கள் படித்தாலும் அத்தனை பேருக்கும் தமிழக முதல்வர் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கிடைக்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், நடப்பாண்டில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 89 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதில் 70% இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படாமல் உள்ள மாவட்டங்களில் அவை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் புதிய தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்றும், எந்த நாட்டில் இருந்து வரக்கூடிய எத்தகைய தொழிற்சாலைகளாக இருந்தாலும் அதில் பணிபுரியக்கூடிய வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.