சென்னை: ‘‘எளிய மனிதராக இருந்து, உயர்ந்த சிந்தனைகளுடன் விளங்கியவர் அப்துல்கலாம்’’ என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் அவருடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மூத்த விஞ்ஞானியும் டிஆர்டிஓ நிறுவன முன்னாள் பொது இயக்குநரும் (வளம் மற்றும் மேலாண்மை), டெல்லி ஐஐடி செயல்முறை பாதுகாப்பு மற்றும் இடர் மேலாண்மையின் சிறப்பு மைய இயக்குநருமான டாக்டர் சித்ரா ராஜகோபால், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். அப்போது அவர்கள் பேசியதாவது:
டாக்டர் சித்ரா ராஜகோபால்: எனது குடும்பப் பின்னணி அறிவியல் தொழில்நுட்பத்தோடு தொடர்புடையதாக இருந்தது. அப்பா ஒரு கெமிக்கல் இன்ஜினீயர். குடும்பத்திலுள்ள பலரும் அறிவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தனர். நான், கெமிக்கல் இன்ஜினீயரிங் துறையில் பட்டப்படிப்பை முடித்து, டிஆர்டிஓ-வில் பணியில் சேர்ந்தேன். 1992 ஜூலையில் ‘ஹெட் ஆஃப் தி டிஆர்டிஓ’வாக அப்துல்கலாம் பொறுப்பேற்றார். ஒருசமயம் கெமிக்கல் இன்ஜினீயரிங் ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட கலாம் வந்தார். அப்போதுதான் அவருடன் அறிமுகமானேன். என்னிடம் மிகுந்த அன்போடு பேசினார்.
எங்களது துறை சார்ந்த பணிகளைப் பற்றி சொன்னதை ஆர்வத்துடன் கேட்ட கலாம். “டிஃபென்ஸ்ல செய்யப்போற பெரிய சிஸ்டத்துக்கும் இதே மாதிரி ரிஸ்க் அண்ட் மெத்தாடலஜி செய்ய முடியுமா?”ன்னு என்னிடம் கேட்டார். கலாம் அப்படி கேட்டதும், உடனே பதில் சொல்ல முடியாமல் நான் தயங்கினேன். “முயற்சி செய்து பாருங்கள்” என்று சொல்லி, இளம் விஞ்ஞானியாக இருந்த என்னை ஊக்கப்படுத்தினார்.
நாம் செய்கிற பணி எப்படி முக்கியமானதோ, அதேபோல பணியைச் செய்பவர்களின் பாதுகாப்பும், சுற்றுச்சூழலும், பொருட்கள் சேதாரமின்றி இருக்க வேண்டியதும் முக்கியமானது என்பதில் மிகுந்த அக்கறையுடையவர் கலாம். எளிய மனிதராக இருந்து உயர்ந்த சிந்தனைகளுடன் விளங்கியவர் அப்துல்கலாம் என்பதே அவரது சிறப்புப் பண்பாகும்.
டாக்டர் வி.டில்லிபாபு: ஏவுகணைத் துறையில் பேராளுமையாக திகழ்ந்த அப்துல்கலாம், பலருக்கும் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் இருந்தவர். இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசகராகவும், டிஆர்டிஓ-வின் தலைவராகவும் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் வி.எஸ்.அருணாசலம், 5 இந்தியப் பிரதமர்களோடு இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். அப்துல்கலாமின் மேலதிகாரியாகவும் இருந்தவர் வி.எஸ்.அருணாசலம் என்பது பலரும் அறியாதது.
இளம் விஞ்ஞானியாக இருந்தாலும் அவர்கள் சொல்கிற விஷயங்களுக்கு காது கொடுத்து கேட்கும் மூத்த விஞ்ஞானியாக அப்துல்கலாம் இருந்தார். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பதற்கான முன்முயற்சிகளையும் கலாம் மிகத் தீவிரமாக மேற்கொள்வார்.
கலாமின் தலைமைத்துவ பண்பின் காரணமாக இந்தியா பல சிறப்பான செயல்களைச் செய்து, சர்வதேச அளவில் மற்ற நாடுகளை விட நம் நோக்கங்களை முன்கூட்டியே அடையக் கூடிய சிறப்பினையும் பெற்றோம். இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பது என்பது கலாமின் அறிவியல் ஆளுமைக்கான சான்றாக விளங்கியது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இந்த நிகழ்வை ‘இந்துதமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார். இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00478 என்ற லிங்க்கில் பார்க்கலாம்.