இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க 11 இடங்களில் தொழிற்பயிற்சி நிலையங்கள்- அமைச்சர் அறிவிப்பு

சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சி.வி.கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டம் மங்களூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் குன்னம், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை ஆகிய 11 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 97.55 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்.
அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும்பொருட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 6000 ரூபாயிலிருந்து 18000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் இப்போது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித்தொகை 20000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை 6000 ரூபாயிலிருந்து 18000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.