டெல்லி: நாட்டில் அதிகரித்துள்ள ‘வெறுப்பு அரசியல்’ குறித்து 100 முன்னாள் அரசு அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ நாயர் உள்ளிட்ட 108 முன்னாள் அரசு அதிகாரிகளில் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டில் வெறுப்புகள் மட்டுமே நிறைந்த ஒரு வெறித்தனத்தை நாங்கள் காண்கிறோம்
முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மை சமூகங்கள் மட்டுமல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் ஏற்றிவைக்கப்பட்டது போல் உள்ளது. முன்னாள் அரசு ஊழியர்களாகிய நாங்கள் சாதாரணமாக இதுபோன்ற தீவிர வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்துவதை விரும்புவதில்லை. ஆனால், நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் தனித்துவம் இடைவிடாத வேகத்தில் அழிக்கப்பட்டு வருவது எங்களின் கோபத்தையும், வேதனையையும் வெளிப்படுத்த தூண்டியுள்ளது.
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு வன்முறை கடந்த சில வருடங்களாகவும், மாதங்களாகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பாஜக ஆட்சியில் உள்ள அசாம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தான் வெறுப்பு அரசியல் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் முன்னாப்போதும் இல்லாதது என நாங்கள் நம்புகிறோம்.
இந்த அச்சுறுத்தல்களால் ஆபத்தில் இருப்பது அரசியலமைப்பு மட்டுமல்ல, நமது மிகப் பெரிய நாகரிக மரபும் சமூக கட்டமைப்பும்தான். இந்த சமூக அச்சுறுத்தலுக்கு எதிரான உங்கள் மௌனம், காது கேளாதது போல் உள்ளது. எனினும், பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அந்தக் கடிதத்தில் முன்னாள் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.