சுட்டெரிக்கும் வெப்பம் காரணமாக, வரும் 30 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளையும் இழுத்து மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கோடைக் காலம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில், கோடை வெயில் கொளுத்துகிறது.
புயல், கனமழையால் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய ஒடிசா மாநிலத்தில் கோடை வெப்பமும் தனது உக்கிர நிலையை காட்டி வருகிறது. இதனால், மக்கள் வெப்பம் சார்ந்த தோல் வியாதிகளை எதிர்கொள்வதுடன் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்டு உள்ள வெப்ப அலையை முன்னிட்டு இன்று முதல் (ஏப்ரல் 26) வருகிற 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி கூடங்களையும் மூடும்படி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. எனினும், முன்பே திட்டமிடப்பட்ட தேர்வுகள் நடைபெறுவதில் எந்த தடையும் இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.