சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் சிலவற்றில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு:
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 26-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 27-ம் தேதி மிதமான மழையும் பெய்யக் கூடும்.