‘ஓலா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கொளுத்திய உரிமையாளர்
தமிழக நிகழ்வுகள்
திருப்பத்துார், :ஆம்பூர் அருகே, ‘ஓலா’ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி, அதன் உரிமையாளரே கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் நகரைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 43; பிசியோதெரபிஸ்ட். இவர், ‘ஓலா புரோ எஸ்’ என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, ‘ஆன்லைன்’ வாயிலாக, 1.5 லட்சம் ரூபாய்க்கு ஜனவரியில் வாங்கினார்.
பழுதான போது, ஓலா நிறுவனம் சரி செய்து தந்துள்ளது. இதற்கிடையே, அந்த வாகனத்தை பதிவு செய்து தருமாறு, பிரித்திவிராஜ் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.ஆம்பூரில் போக்குவரத்து அலுவலகம் இருந்தும், 40 கி.மீ.,யில் உள்ள குடியாத்தம் போக்குவரத்து அலுவலகத்துக்கு, அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்தால், பதிவு செய்து தருவதாக ஓலா நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.அதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, அந்த ஸ்கூட்டருக்கு முழு, ‘சார்ஜ்’ போட்டு, நேற்று காலை குடியாத்தம் சென்று, மீண்டும் ஆம்பூர் நோக்கி வந்தார்.
உள்ளி கிராமம் அருகே, ‘பேட்டரி தீர்ந்துவிட்டது’ என சமிக்ஞை வந்ததால், ஸ்கூட்டர் நடுவழியில் நின்றுவிட்டது.காலை 10:30 மணிக்கு, ஓலா ‘கஸ்டமர் கேர்’ போன் எண்ணை அழைத்து, பிரித்திவிராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மூன்று மணி நேரமாகியும், பதில் இல்லை என கூறப்படுகிறது.இதனால், ஆத்திரம் அடைந்த அவர், தன் மின்சார ஸ்கூட்டரை சாலையோரமாக நிறுத்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். அதை ‘வீடியோ’ எடுத்து, தன் முகநுால் பக்கத்திலும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் சர்வேயர், உதவியாளர் கைது
வடலுார் குறிஞ்சிப்பாடியில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் கிராம உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிபேட்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன்; விவசாயி. இவர், நிலத்தை பட்டா மாற்றம் செய்ய கிராம உதவியாளர் ஆனந்தனிடம் கேட்டார்.அவர், குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலக சர்வேயர் தங்கராஜை அறிமுகம் செய்து வைத்ததுடன், பட்டா மாற்றம் செய்ய 6,000 ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளார்.இது குறித்து விவசாயி நீலகண்டன், கடலுார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து சர்வேயரிடம் தருமாறு கூறி அனுப்பினர்.குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் இருந்த சர்வேயர் தங்கராசு, கிராம உதவியாளர் ஆனந்தன் ஆகியோரிடம் விவசாயி நீலகண்டன் நேற்று ரசாயனம் தடவிய 6,000 ரூபாயை கொடுத்தார்.மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், சர்வேயர் தங்கராசு, கிராம உதவியாளர் ஆனந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
***************
இந்திய நிகழ்வுகள்
மகன் உடலை 90 கி.மீ., துாரம் பைக்கில் எடுத்து சென்ற தந்தை
திருப்பதி, மருத்துவமனையில் இறந்த 10 வயது மகனை, ஆம்புலன்சில் துாக்கி செல்ல பணம் இல்லாததால், 90 கி.மீ., துாரம் மோட்டார் பைக்கிலேயே எடுத்துச் சென்ற அவலம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, ராஜம்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரசிம்மலு என்பவரின் 10 வயது மகன், சிறுநீரக கோளாறால் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் இறந்தார். மகன் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் செல்ல போதிய பணம் இல்லாததால், அவரது தந்தை, 90 கி.மீ., துாரத்தில் உள்ள தன் ஊருக்கு, பைக்கிலேயே எடுத்துச் சென்றார்.இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
***************************
உலக நிகழ்வுகள்
பாக்.,கில் குண்டு வெடிப்பு :4 பேர் உயிரிழப்பு
கராச்சி :பாகிஸ்தானின் கராச்சி பல்கலை வளாகத்தில், நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்து, மூன்று சீனர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் கராச்சி பல்கலையில் ஏராளமான வெளிநாட்டினரும் படிக்கின்றனர். இங்கு சீன மொழி கற்பிக்கும் கன்பூசியஸ் மையம் உள்ளது.நேற்று, இதன் அருகே நிறுத்தப்பட்டு இருந்த வேன், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. சக்தி வாய்ந்த இந்த குண்டு வெடிப்பில் மூன்று சீனர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்களில் இருவர் பெண்கள். இச்சம்பவம் பாக்., முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.