பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகம் அருகே வேனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக் கழகத்தில் பாடம் கற்பித்து விட்டு விரிவுரையாளர்கள் மாணவர்களுடன் வந்த வேனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேன் வெடித்து ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இருவர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் சென்றுள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள காட்சிகளில் ஒரு வெள்ளை வேன் தீப்பிடித்து எரிந்து பெரும் புகை மூட்டங்கள் எழுகின்றன.
மூன்று சீன நாட்டினர் உயிரிழந்ததாகவும் விரிவுரையாளர்கள் சீன மொழித் துறையில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பின் தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு நாசவேலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஸ்பி குல்ஷன் தெரிவித்தார். “வெடிப்பின் தன்மையை கண்டறிய வெடிகுண்டு செயலிழக்கும் படையும் வரவழைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரிவினைவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “பலோஜ் லிபரேஷன் ஆர்மி இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. சீனர்கள் மீது தாக்குதல் நடத்த தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜீயந்த் பலோஜ் என்பவர் தனது டெலிகிராமில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலை ஒரு பெண்ணை கொண்டு நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 சீனர்கள் கொல்லப்பட்டுள்ளதை கராச்சி காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.
பலோசிஸ்தான் மகாணத்தில் சீனர்களை குறித்து அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். பலோசிஸ்தான் மாகாணத்தில் சீன அரசு பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM