முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் உலோகத்தினாலான முழு உருவச்சிலை வைக்கப்படவிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை வைக்கபட்டுள்ள முழு உருவ உலோகச் சிலைகளிலேயே மிக உயரமான சிலையாக இது அமையவுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும். அதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அறிவித்தார் முதல்வர். ஏற்கெனவே அண்ணா சாலையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டவர்களுக்கும், பெரியார் சிலையும் உள்ளது. இந்த வரிசையில் அண்ணா சாலையில் கருணாநிதி சிலையும் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு திமுக-வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இன்று சட்டமன்றத்தில் 110- விதியின் கீழ் ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அந்த அறிவிப்பில் “கலைஞர் அவர்கள் பிறந்த ஜுன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என இந்த அவைக்கு அறிவிக்கிறேன். வரும் ஜுன் 3-ம் தேதி அன்று சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கலைஞரின் கம்பீர சிலை நிறுவப்படும்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு திமுக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்கள் வரவேற்பைக் காட்டினார்கள்.
சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே நடந்துவருவதாகச் சொல்கிறார்கள் தி.மு.கவினர். கருணாநிதி மறைக்குப் பிறகு அவருடைய முழு உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டது. அந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கும்மிடிப்பூண்டி தீனதயாளன் என்பவர். தமிழகத்தில் மட்டும் தற்போது 20-க்கும் மேற்பட்ட கருணாநிதியின் சிலைகளை செய்துக்கொடுத்துள்ளார் சிற்பி தீனதயாளன்.அவரிடமே தற்போது தமிழக அரசு வைக்க உள்ள கருணாநிதியின் சிலைக்கும் பொதுப்பணித்துறை ஆர்டர் கொடுத்திருக்கிறது
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலை மாடலிலேயே இந்த சிலையும் அமைய உள்ளது. அரசு அமைக்க உள்ள இந்த சிலையின் உயரம் மட்டும் 16 அடி. முழுவதும் வெண்கலத்தினால் இந்த சிலை செய்யப்படுகிறது. ஏற்கெனவே மூன்று டன் களிமண் கொண்டு 16 அடியில் இந்த சிலையின் மாடல் செய்யப்பட்டு, சிலையின் புகைப்படம் முதல்வர் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அவரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை செய்து சிலைக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகே இப்போது மெழுகில் அச்சு எடுக்கப்பட்டு, வெண்கத்தில் சிலை செய்தவற்கான வேலைகளில் தீனதயாளன் ஈடுபட்டுள்ளார்.
16 அடியில் அமைய உள்ள இந்த சிலை இரண்டு டன் எடை கொண்டது. தமிழகத்தில் தற்போது உயரமான சிலையாக கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையே உள்ளது. தற்போது கருணாநிதிக்கு அமைக்கப்பட உள்ள இந்த சிலையே உலோகத்தினால் செய்யப்படும் அதிக உயரம் கொண்ட சிலையாகும். இந்த சிலைக்கான செலவுகளை பொதுப்பணித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது சிலைக்கான வேலைகள் நடந்துவரும் நிலையில் இந்தப் பணிகள் மே மாதம் இறுதியில் முடியும் என்கிறார்கள். அண்ணா சாலையில் சிலையை அமைக்கவே அரசு தரப்பு திட்டமிட்டது. ஆனால் சரியான இடம் அமையாமல் இருப்பதும், அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக எதிர்காலத்தில் சிலையை மாற்றும் சூழ்நிலையும் வரலாம் என்பதால் ஓம்ந்தூரர் வளாகத்தில் சிலையை வைக்க அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மேலும் சிலையின் உயரமும் அதிகம் என்பதால் சாலையில் சிலையை வைத்தால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜுன் 3-ம் தேதி கருணாநிதியின் இந்த சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கும்மிடிபூண்டியில் தயாராகிவரும் கருணாநிதியின் சிலையை பார்வையிட விரைவில் கும்மிடிப்பூண்டி செல்லவும் முதல்வர் திட்டமிட்டுள்ளாராம். “நீண்ட துாரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர் அவர்கள். அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு” என்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியது போல, அனைவரும் அண்ணாந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட உயரத்தில் அமையுள்ள இந்த சிலை, அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் தி.மு.க வினர்.