கர்நாடகாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம்: அரசு உத்தரவு

பெங்களூரு :

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

இதையடுத்து, கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா 4-வது அலை உருவாகாமல் தடுக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகத்தில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொது இடங்களான ரெயில், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

இதுதவிர உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யவில்லை. முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

இதுதொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் அரசு சார்பில் வெளியிடப்படும். தற்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை தீவிரமாக கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் வைத்து கொண்டு அரசு சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இதனை அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.