பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடகா எம்.எல்.சி-யுமான ஏ.எச்.விஸ்வநாத் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்வதைத் தடைசெய்ததைக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார். வி.எச்.பி, இந்து ஜாகரன வேதிகே, பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீராம சேனா உள்ளிட்ட அமைப்புகள் அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை எதிர்த்து அவர் பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மைசூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ஜக மூத்த தலைவரும், கர்நாடகா எம்.எல்.சி-யுமான ஏ.எச்.விஸ்வநாத், “கர்நாடக அரசுக்கு நிபந்தனைகளை ஆணையிடவும், மத உணர்ச்சிகளைத் தூண்டி வகுப்புவாதத்தைத் தூண்டிவிடவும் பிரமோத் முத்தாலிக் யார்? இப்படிப்பட்டவர்கள் மீது அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது வருத்தமாக இருக்கிறது.
அரசின் இத்தகைய நடவடிக்கை மக்களுக்குத் தவறான சமிக்கைகளாக மாறிவிடும். இந்த அரசு ஆர்.எஸ்.எஸ் அல்லது வி.எச்.பிக்கு சொந்தமானது அல்ல என்பதை முத்தாலிக் நினைவில் கொள்ளவேண்டும். வகுப்புவாதத்தை தூண்டுவது பைத்தியக்காரத்தனம். எந்தக் கடவுளும் எந்த மதமும் இப்படிப்பட்ட விஷயங்களைப் போதிப்பதில்லை. மதங்கள் அனைத்து உயிரையும் உள்ளடக்கியவை. ஒரு குழுவுக்கு மட்டும் பிரத்தியேகமானவை அல்ல.
இவர்களின் விஷயத்தில் மாநில அரசு ஏன் மெத்தனமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களின் இதுபோன்ற நடவடிக்கை ஜனநாயக விரோதமானது. உலகம் முழுவதும் எத்தனை இந்தியர்கள் உள்ளனர்? முஸ்லிம் நாடுகளில் எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்? இந்த நாடுகள் நமக்கு எதிராகச் செயல்பட முடிவெடுத்தால்… இது எங்கே முடியும்?
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டபோது இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியாவையே தமக்கான பூமியாக வாழத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஜின்னாவுடன் செல்லவில்லை. அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்காக இங்கேயே இருந்தார்கள். அவர்கள் இந்தியர்கள், வேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதைப் பற்றி நாம் ஏன் சிந்திக்கவில்லை” எனக் கூறினார்.