புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான கவச வாகன அழிப்பு ஏவுகணைகள் மிகவும் திறன் வாய்ந்தவை. பெரிய அளவிலான பீரங்கிகள், டேங்குகள் போன்ற கவச வாகனங்களில் நான்கு புறத்திலும் கடினமான பொருள்களால் கவசம் உருவாக்கப்பட்டிருக்கும்.
பாதுகாப்பும் அதிகம். ஆனால் மேற்புறம் பலவீனமாக இருக்கும். ஜாவ்லின் போன்ற ஏவுகணைகளை வீசி மேற்புறமாகத் தாக்கும்போது கவச வாகனங்கள் அழிக்கப்படும். இதுபோன்ற கவச வாகன அழிப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் தயாரித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான இந்த வகை ஏவுகணைகள் தற்போது இந்திய ராணுவத்திலும், விமானப்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
சீனாவுடன் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் எல்லைப்பிரச்சினை காரணமாக இந்த வகை ஏவுகணைகளை வாங்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தற்போது கவச வாகன அழிப்பு ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.
5.5 கி.மீ. தூரத்திலுள்ள இலக்கை..
இவை தற்போது இந்திய ராணுவம், விமானப் படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன. ஸ்பைக் எல்ஆர்-2 லாஞ்சர்கள், ஏவுகணைகள் தற்போது ராணுவப் படைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை 5.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்கையும் தாக்கும்.
இந்த வகை ஏவுகணைகள் இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. விமானப் படைகளில் பொருத்தப்படும் கவச வாகன அழிப்பு ஏவுகணைகள் ஸ்பைக் என்எல்ஓஎஸ் வகையைச் சேர்ந்தவை. இவை வானிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இலக்கையும் தாக்க வல்லவை.
அதிக அளவிலான கவச வாகன அழிப்பு ஏவுகணைகள் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உருவாக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவுடன் உண்மையான எல்லைக் கோட்டு(எல்ஏசி) பிரச்சினைக்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை செய்துள்ளது.