சென்னை: 2021-2022 ஆம் ஆண்டில் 872 குடிநோய் குற்றவாளிகளின் மறுவாழ்விற்காக ரூ.2.61 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்:
> தற்போது தமிழகத்தில் 11 இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 7 பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் 1 ஒயின் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகின்றன.
> தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு பீர் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்றுமதி அனுமதி இணைய வழியில் வழங்கப்பட்டு வருகிறது.
> 2021-2022 ஆம் ஆண்டில் அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலம் சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.33.83 கோடியும், சேவைக்கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிப்க கழகத்திற்கு ரூ.3.58 லட்சமும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மனந்திருந்திய குடிநோய் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு நிதி > முன்னாள் குடிநோய் குற்றவாளிகளின் சமூக மற்றும் பொருளாதார மறுவாழ்விற்காக அரசு ரூ.5 கோடி மானியமாக வழங்கி வருகிறது.
> இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளைத் தெரிவு செய்து, அவர்களின் பொருளாதார மறுவாழ்விற்காக மானியம் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாள், முதுநிலை மண்டல மேலாளர் (தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) துணை ஆணையர் (காவல்) உதவி ஆணையர் (கலால்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு மறுவாழ்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
> அடையாளம் கண்டறியப்பட்ட ஒவ்வொரு பயனாளிக்கும் மானியமாக அதிகபட்சமாக ரூ.30,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
> இந்நிதியுதவியின் மூலம் பயனாளிகள் நிரந்தர வருவாய் ஈட்டும் பொருட்டு, ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வளர்த்தல், ஊதுவத்தி, கற்பூரம், உடனடி சாம்பிராணி, மெழுகுவர்த்தி, காகிதக்குவளை, சலவை சோப்பு, சலவைத்தூள் ஆகியவற்றை தயாரித்தல் மற்றும் சிறு வியாபாரங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது.
> 2021-2022 ஆம் ஆண்டில் 872 குடிநோய் குற்றவாளிகளின் மறுவாழ்விற்காக ரூ.2.61 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
> தமிழகத்தில் 19 போதை மீட்பு மையங்கள் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன.