உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை கைவிட்டு, போர் முடிவதற்குள் தங்களால் இயன்ற நிலப்பரப்பைக் கைப்பற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேனிய துருப்புகளால் ரஷ்யாவின் மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது விளாடிமிர் புடினை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, உக்ரைன் உடனான பேச்சு`வார்த்தைகள் இனி தொடர்வதில் பொருளில்லை என அவர் முடிவுக்கு வந்துள்ளதாக ரஷ்ய தரப்பு நம்புகிறது.
மேலும், உக்ரைன் போரில் வெற்றியாளராக திரும்பவே புடின் விரும்புவதாகவும், உக்ரேன் தொடர்பில் உலக நாடுகளுக்கு முன்பு தலைகுனிவை சந்திக்க புடின் விரும்பவில்லை எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அதிக உயிர்சேதத்தை தவிர்க்க, ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடரவே உக்ரைன் விரும்புவதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரத்தக்களரியை நிறுத்த அனைத்து அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளையும் பயன்படுத்துவோம்.
அரசியல் ஆதாயத்திற்காக உக்ரைன் தனது மக்களையும் அதன் பிரதேசங்களையும் ஒருபோதும் கைவிடாது என்றே மூத்த உக்ரேனிய அதிகாரி ருஸ்டெம் உமிரோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, போர் நிறுத்த நடவடிக்கைகள் மிக விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே மேற்கத்திய நாடுகளும் நம்புவதாக ஐக்கிய நாடுகள் மன்ற பொதுச்செயலாளர் Antonio Guterres தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவிக்கையில், துறைமுக நகரமான மரியுபோலிலிருந்து ரஷ்ய துருப்புகளை வெளியேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா தலைவரை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு இலக்கான உக்ரேனில் விஜயம் செய்வதற்கு பதிலாக ஐ.நா பொதுச்செயலாளர் முதலில் ரஷ்யாவுக்கு பயணப்படுவது உண்மையில் கவனிக்கத்தக்க விடயம் எனவும் குலேபா சுட்டிக்காட்டியுள்ளார்.
மரியுபோல் நகரில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஒற்றை விவகாரத்தில் Antonio Guterres கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.