புதுடெல்லி: சமூக ஆர்வலர் ஜுவ்வாதி சாகர் ராவ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், “தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ரியல் எஸ்டேட் துறையினர் சட்டவிரோதமாக நிறுவிய குடியிருப்புகளால் மழைக்காலங்ளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுடன், முறையற்ற வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
இதைப் பொருட்படுத்தாத அதிகாரிகள், சட்டவிரோத குடியிருப்புகளை முறைப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது. இதுகுறித்து முறையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறும்போது, “நாடு முழுவதும் சட்டவிரோத குடியிருப்புகள் பல்கிப்பெருகி வருகின்றன. இது நகர்ப்புற வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மாநில அரசுகள்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் கோபால்சுப்ரமணியம் நியமிக்கப்படுகிறார். சட்டவிரோத குடியிருப்புகளை தடுப்பது குறித்து அவர் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்வார்” என்றனர்.