புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் தலைவர் ஆஸம் கான் சிறையில் தன்னை பார்க்க வந்த தங்கள் கட்சி எம்எல்ஏவை சந்திக்க மறுத்துவிட்ட நிலையில் நேற்று உ.பி. காங்கிரஸ் தலைவரை சந்தித்துப் பேசினார்.
சமாஜ்வாதி கட்சியின் முக்கிய முஸ்லிம் தலைவரான ஆஸம் கான் கடந்த 26 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அவரது விடுதலைக்கு கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முயற்சி எடுக்கவில்லை என அவரும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சமாதான முயற்சி தோல்வி
அகிலேஷும் ஆஸம் கானும் ராஜினாமா செய்த ஆசம்கர் மற்றும் ராம்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. எனவே ஆஸம் கான் குடும்பத்தினரை சமாதானப்படுத்த அகிலேஷின் கூட்டணிக் கட்சித் தலைவரான ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி அண்மையில் சந்தித்தார். இதனால் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து ஆஸம் கானை சந்திக்க அகிலேஷ் சார்பில் அவரது கட்சி எம்எல்ஏவான ரவிதாஸ் மல்ஹோத்ரா நேற்று முன்தினம் சீதாபூர் சிறைக்குச் சென்றார். ஆனால் ஆஸம்கான் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி இவரை சந்திக்க மறுத்துவிட்டார்.
ஆனால் அகிலேஷ் மீது அதிருப்தியில் இருக்கும் அவரது சித்தப்பாவும் பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான ஷிவ்பால் சிங் யாதவை கடந்த வெள்ளிக்கிழமை ஆஸம் கானை சந்திக்கச் சென்றபோது, அவருடன் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார் ஆஸம்கான்.
எனவே ஆஸம்கான் மற்றும் அவரது ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு பணிந்த அகிலேஷ், “ஆஸம்கானுக்கு சமாஜ்வாதி கட்சியின் முழு ஆதரவு உள்ளது. அவர் ஜாமீனில் விடுதலையாக கட்சி சார்பில் சட்ட உதவிகள் அளிக்கப்படும்” என நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் உ.பி. காங்கிரஸின் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணாம் நேற்று சீதாபூர் சிறைக்குச் சென்று ஆஸம் கானை சந்தித்து பேசினார். ஆஸம் கானை காங்கிரஸுக்கு இழுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரமோத் கிருஷ்ணாம் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த சந்திப்பில் அரசியல் நோக்கமில்லை. ஆஸமின் உடல்நலம் குறித்து விசாரித்து, அவருக்கு பகவத் கீதை நூல் அளிக்கவே இங்கு வந்தேன். ஆஸம் விடுதலைக்குப் பிறகு அவருடன் அரசியல் பேசுவேன்” என்றார்.
இதற்கு முன் ஹைதராபாத் எம்.பி.யான அசதுத்தீன் ஒவைசி தனது கட்சியில் சேரும்படி ஆஸம்கானுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே ஆஸம் கானை பாஜகவின் கோண்டா தொகுதி எம்.பி. பிரிஜ்பூஷண் சிறையில் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.